தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தலைவர் விசாரணை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ்-டூ மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான விசாரணை குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மற்றும் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதனை அடுத்து மாணவியின் இறப்பு தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் விஜயபாபு, சி.பி.சி.ஐ.டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, கோட்டாட்சியர் பவித்ரா, முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, சமூக நல அலுவலர் தீபிகா, மருத்துவர்கள் கார்த்திகேயன், செந்தில் குமார், நன்னடத்தை அலுவலர் சக்திவேல் மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் மாணவி இறப்பு குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பின் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் நிருபர்களுக்கு கூறியதாவது, மாணவி ஸ்ரீமதியின் இறப்பு தொடர்பாக அவரது பெற்றோரை சந்தித்து விசாரணை நடத்திய பின் சம்பவம் நடந்த பள்ளியிலும் மற்றும் விடுதியிலும் ஆய்வு செய்து இருக்கிறோம். பிறகு மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை பெறப்பட்டுள்ளது.
பின்னர் முதற்கட்ட விசாரணை நடத்திய காவல்துறை, கல்வித் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் வருவாய் துறை ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டோம். இதன் மூலமாக பள்ளியில் இருக்கும் விடுதி அனுமதி இன்றி செயல்பட்டு இருப்பதோடு மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு அடிப்படை வசதியில் குறைபாடுகள் உள்ளதை அறிந்து கொண்டோம். இதனைத் தொடர்ந்து மாணவி உயிரிழப்பு பற்றி நடத்திய விசாரணையில் சில குறைபாடுகளும், அதிகாரிகளின் கவனக்குறைவும் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் மாணவி தங்கி இருந்த விடுதியில் கூடுதல் விசாரணை செய்ய இருப்பதாகவும் விசாரணை அறிக்கையை மத்திய-மாநில அரசுகளிடம் விரைவில் சமர்ப்பிப்போம் என அவர் கூறியுள்ளார்.