தமிழகத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட போக்குவரத்து விதிமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் சில கேள்விகளை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது, திமுக அரசு போக்குவரத்து விதிமுறைகள் என்ற பெயரில் இளைய சமுதாயத்தவரிடம் சுரண்டலில் ஈடுபட்டுள்ளது. 50 ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக சாலை விபத்துகள் நடைபெறுகிறது என்பது மிகவும் வருத்தமான ஒன்றுதான். கடந்த வருடம் 11,419 பேர் சாலை விபத்தால் உயிரிழந்துள்ளனர்.
பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களை பாதுகாப்பதற்காக மட்டுமே சட்டங்கள் இருக்கிறதே தவிர அவர்களிடமிருந்து சுரண்டுவதற்காக அல்ல. ஆனால் தற்போது கொண்டுவரப்பட்ட சட்டமோ மக்களை வாட்டி வதைக்கும் விதத்தில் இருக்கிறது. ஒரு மாதத்திற்கு குறைந்தது 10 முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் வாங்கும் இளைஞர்களால் எப்படி 10,000 ரூபாய் 20,000 ரூபாய் அபராதம் செலுத்த முடியும். இன்று எங்கு பார்த்தாலும் இளைஞர்களின் ஆதங்கக் குரல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
லைசன்ஸ் இல்லனா 5000 அபராதம். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது லிப்ட் கேட்டு ஏற்றி வருபவர்கள் ஹெல்மெட் அணியா விட்டாலும் அதற்கும் வாகன ஓட்டிகளிடம் அபராதம். இது இளைஞர்களை முடக்கும் வேலையா? அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர பகல் கொள்ளையாக இருக்கக் கூடாது. மேலும் இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்ட வேண்டிய அரசே அபராதம் என்ற பெயரில் பொருளாதார சுரண்டலை இளைஞர்களின் மீது ஏவி விட்டு மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.