பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, அவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் காசியை 3 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார்.
ஏற்கனவே, காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது. வடசேரி காவல்நிலையத்தில் காசியின் மீது மேலும் புதிதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே மோசடி இளைஞர் காசியின் தந்தை இன்று மாவட்ட ஆட்சியரிடம் “தனது மகனை போலீசார் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக” புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இந்நிலையில் காசியின் தந்தை தங்கபாண்டியனிடம் கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.