தமிழக காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ் மற்றும் வெங்கடேசன் தங்களை சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் முன்பு விசாரணை வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர்கள் 40 வயதை கடந்து விட்டதாலும், துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும் அவர்களை சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது எனவும் வாதிட்டார்கள்.
இதை ஏற்று நால்வரின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி, சமூகத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் சட்ட ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு நேர்மை, ஒழுக்கம், கண்ணியம் மிகவும் முக்கியம் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் காவலர்கள் காவல் நிலையத்திலேயே மாமூல் வழங்குவதாக குற்றச்சாட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி, சட்ட ஒழுங்கு பிரிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வது உயர் அதிகாரிகளின் பொறுப்பு எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்து விட்டதாக வேதனை தெரிவித்து இருக்க கூடிய நீதிபதி, நேர்மையானவர்களையும், ஒழுக்கமானவர்களையும் சட்ட ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருக்கிறார்.