சலூன் கடைகள் செயல்பட அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச்25ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சலூன் கடைகள் செயல் பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கத் தலைவர் முனுசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கு விவரம்:
அவர் தாக்கல் செய்த மனுவில், “ஊரடங்கிற்கு முன்னதாக 15 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வந்த சுமார் 10 லட்சம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களாக எந்த வித வருவாயும் இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்ட உள்ள ஒவ்வொரு முடிதிருத்தும் தொழிலாளருக்கும், தலா ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், முடிதிருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினி சாவினால் பாதிக்கப்படும் முன் அனைத்து சலூன் கடைகளையும் உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்ற பகுதிகளில் படிப்படியாகத் திறப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வாதிட்டார்.
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு:
அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், முடிதிருத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் சலூன் கடைகள் செயல்பட அனுமதிப்பது குறித்தும் ஒரு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.