ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி அத்தியாவசியத் தேவை இன்றி வெளியில் சுற்றுபவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 618 வாகனங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 654 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 742 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக காஞ்சிபுரம் சரகத்தில் மொத்தம் 2014 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் விதியை மீறி செயல்பட்ட நபர்கள் மீது மொத்தமாக 2745 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளார்.