Categories
மாநில செய்திகள்

“அவங்களுக்கு யாருன்னு தெரியும்”….. தமிழக போலீஸ் ஒழுங்காக இருந்தால் 24 மணி நேரத்தில்….. பரபரப்பை கிளப்பிய விக்ரம ராஜா….!!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புகளின் 2-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில் வணிகர் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா கலந்து கொண்டு பேசினார். அதன் பிறகு விக்ரம ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து வணிகர் சங்க கூட்டமைப்புகளின் சார்பில் முதல்வரிடம் பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் பிறகு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தில் பதிவு செய்துள்ள வணிக நிறுவனங்களுக்கு 15 சதவீதம் வரை மின் கட்டணத்தை குறைத்துள்ளனர். இதற்காக மின்சாரத்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோன்று இரவு, பகல் என்று பிரிக்காமல் ஒரே சீரான மின்கட்டண முறையையும் அமல்படுத்த வேண்டும்‌. தமிழகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகடையாக சென்று வியாபாரிகளை ‌ அச்சுறுத்தி வருகிறார்கள்.

பொருட்களை தயார் செய்யும் பெரிய நிறுவனங்கள் தவறு செய்யும் போது அதை வாங்கி விற்பனை செய்யும் சிறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது முறையாகாது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம். இதேபோன்று கொரோனா முடக்கத்தினால் வேலை வாய்ப்பை இழந்த வியாபாரிகள் தற்போது வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவர்களை அதிகாரிகள் கடை கடையாக சென்று தொந்தரவு செய்வதை நிறுத்திக் கொள்ள வலியுறுத்தி முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்.

தமிழகத்தில் தேநீர் விலை உயர்த்தப்பட்டதற்கு காரணம் ஆவின் பால் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு மற்றும் வணிகவரி, கட்டிட வரி, வாடகை போன்றவைகள்தான். இதனையடுத்து அரிசி, கடுகு மற்றும் மிளகு போன்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டி விதியை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் குட்கா போன்ற போதை பொருட்களை முழுமையாக விற்பனை செய்வது யார் என்பது தமிழக காவல்துறைக்கு நன்றாக தெரியும். காவல்துறை மட்டும் ஒழுங்காக செயல்பட்டால் 24 மணி நேரத்தில் குட்கா மற்றும் புகையிலை இல்லாத தமிழகமாக மாற்ற முடியும் என்று கூறினார். மேலும் தமிழக காவல்துறை சரியாக செயல்பட்டால் 24 மணி நேரத்தில் போதைப் பொருள் இல்லாத தமிழமாக மாற்றலாம் என வணிகர் சங்கத்தின் தலைவர் கூறியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |