நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 29 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.
நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.தாமரை கண்ணன் மாவட்டம் முழுவதிலும் சோதனை செய்ய நாமக்கல் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரிகளான சுஜாதா, செல்லப்பாண்டியன், ரவிக்குமார், மணிமாறன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், ராசிபுரம், குமாரபாளையம் உட்பட மொத்தம் 36 இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பரமத்திவேலூரில் நடத்திய சோதனையில் 190 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். அதன் மதிப்பு 1,75,000 ஆகும். இதனைத்தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராமசேகர்(62), மதன்லால்(35) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதிலும் நடைபெற்ற இந்த திடீர் சோதனையில் 29 லட்சம் மதிப்புள்ள 2¾ டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் மூட்டை மூட்டையாக கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து மொத்தம் 39 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசிய போது புகையிலை பொருட்கள் எங்கிருந்து நாமக்கலுக்கு வருகிறது என்பதை விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த நிலையில் தடை செய்யப்பட்ட புகையிலைகளை விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.