இந்தியாவைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை, இஸ்ரேல் நிறுவனம் ஒன்று வாட்ஸ்அப் செயலி மூலம் வேவு பார்த்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலி மூலம் பல இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், 1,400 இந்திய பயனாளிகளை மத்திய அரசு வேவு பார்ப்பதற்கு, அந்த இஸ்ரேலி நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தலித் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மூத்த அரசு அலுவலர்கள், அரசுக்கு எதிராக கருத்து உடையவர்கள் ஆகியோர்தான் வேவு பார்க்கப்பட்டார்கள் என வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிரபல பத்திரிகையில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
இதுகுறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “பலரை வேவு பார்க்க இஸ்ரேலி நிறுவனம் மத்திய அரசுக்கு உதவியது உண்மை. என் செல்ஃபோனும் வேவு பார்க்கப்பட்டது. என்னிடம் அதற்கு ஆதாரம் உள்ளது. அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அலுவலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. பிரதமர் மோடி இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மாநில அரசுகள் இதுபோல் செய்துள்ளன. ஆனால், அவர்களின் பெயர்களை வெளியிட மாட்டேன்” என்றார்.மம்தாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது