அரியர் தேர்வு விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார், ஆதித்தன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது அரியர் தேர்வு விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு ஆதரவாக வழக்கு தொடரும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் பத்தாம் வகுப்பு முதல் அவர்களின் கல்வி விவரங்கள் கேட்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பொறியியல் பயின்றவர்களே பணியாற்றுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், தேர்வுகள் எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் என்றும் கேள்வி எழுப்பினர். தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு பதிலளிக்க நவம்பர் 20ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.