போக்குவரத்து பணியில் ஈடுபட்ட பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை போலீஸ்காரராக பூங்கோதை வேலை பார்த்து வருகின்றார். கடந்த 27-ஆம் தேதி இரவு பெருந்துறை குன்னத்தூர் நால் ரோடு சந்திப்பில் வாகன போக்குவரத்தை பூங்கோதை சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது ஈரோட்டில் இருந்து குன்னத்தூர் ரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வாகன போக்குவரத்தை கண்காணித்துக் கொண்டுடிருந்த பெண் போலீசார் பூங்கோதையை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகின்றது.
இதுகுறித்து பூங்கோதை கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையில் தகராறில் ஈடுபட்டவர் பெருந்துறை குன்னத்தூர் ரோடு செல்லம் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பதும், அவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருவதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.