Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்களுக்கு நாங்கள் எதிரி இல்லை…. சதி செய்து பழி சுமத்திட்டாங்க – மு.க.ஸ்டாலின்

திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல  என்று சமத்துவ பொங்கல் விழாவில் ஸ்டாலின் கூறினார்.  

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு க ஸ்டாலின் பொங்கல் திருநாளை முன்னிட்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் அவருடைய கோபாலபுரத்தில் உள்ள இல்லம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.

அதன் பிறகு மாலையில் கோணாம்பேடு கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மு.க ஸ்டாலின் பங்கேற்றார். அவ்விழாவில் அவர் பேசியதாவது,” தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை பிறந்து விட்டது. வழியும் பிறக்க வேண்டும். பிறக்க தான் போகிறது. பிறந்தே தீரும். அது பிறக்கத்தான் மக்களாகிய நீங்கள் இங்கு கூடி இருக்கிறீர்கள்.

பாஜக, ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு திமுக ஏதோ இந்துக்களுக்கு எதிரி போல பேசி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் என்னுடைய மனைவி போகாத கோவிலே கிடையாது. திமுகவில் இருக்கக்கூடிய பல மாவட்ட செயலாளர்கள் நெற்றியில் குங்குமம் வைத்து இருப்பார்கள்.

அந்த பக்தியை நான் குறை சொல்ல தயாராக இல்லை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். என்னதான் திட்டமிட்டு சதி செய்து திமுக மீது பழி சுமத்திக் கொண்டு இருந்தாலும் அவையெல்லாம் எடுபடாது என்பதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் நிரூபித்துக்காட்ட தான் போகிறார்கள் என்பதை நான் உறுதியுடன் தெரிவிக்கிறேன்”.

 

Categories

Tech |