திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் இணைய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வக வசதியை ஏற்படுத்தும் திட்டத்திற்காக மத்திய மீன்வளத்துறை 19 கோடியே 26 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அத்திட்டத்தின் முதல் கட்டமாக, காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் 4 கோடி ரூபாயில் ஆய்வகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
அந்த விழாவில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கு மீன்வளர்ப்பு விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தான் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.
மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் இணைய வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே மக்களவையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகளின் கூட்டணி இந்த தேர்தலிலும் தொடரும். பாமாகவுடன் எந்தவிதமான இழுபறியும் அதிமுகவிற்கு இல்லை. மேலும் தேமுதிக ஏற்கனவே எங்களுடன் கூட்டணியில் தான் இருக்கிறது” என்று கூறினார்.