சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பல்வேறு விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாநகராட்சி தரப்பிலும் பிரத்யேக மேம்பாட்டுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தி.நகர் ஸ்கைவாக் பாலம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். நாள்தோறும் மூச்சு திணறும் அளவிற்கு வாகன நெரிசல், மக்கள் திரளும் நிறைந்து காணப்படும் பகுதி என்றால் அது தி.நகர் தான். அதில் ரங்கநாதன் தெருவில் உள்ளே நுழைந்து விட்டால் எப்போது வெளிவரும் என்ற அளவிற்கு திக்கு முக்காடி விட நேரிடும். இந்த வழியை கடைவீதிகளுக்கு செல்வதற்கு மட்டுமில்லாமல் மாம்பாலம் ரயில் நிலையம் செல்வதற்கும் தி.நகர் பேருந்து நிலையம் வருவதற்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் மாம்பலம் ரயில் நிலையத்தில் மட்டும் தினசரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தினசரி கூட்ம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதனை ஓரளவு சமாளிக்க கூடிய வகையில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் ஸ்கைவாக் திட்டம். இந்த திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு 4 மீட்டர் அகலத்தில் 600 மீட்டர் நீளம் கொண்டு மேம்பாலமாக உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை 15 மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிட்டனர். மிகவும் பிசியான சாலை பகுதி என்பதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவை தொகை, மேம்பால திட்டம் வடிவமைகளின் மாற்றம், ஊழியர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பணிகள் தாமதம் ஆகியது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக காலை முதல் மாலை வரை விடாமல் பணிகள் செய்து வருகின்றனர். தற்போது 90% பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறுகின்றனர். விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தி.நகர் செல்லும் மக்கள் எதிர்பார்த்துள்ளனர். தி.நகர் ஸ்கைவாக் பாலத்தில் ஏறுவதற்கு படிக்கட்டுகள் தான் அமைக்கப்பட்டு வந்தது . இது வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படுத்த பெரிதும் சிரமமாக இருக்கும். எனவே லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் திட்டமிட்டுள்ளது. ஸ்கைவாக் பாலம் ஏறும் இடம் மற்றும் இறங்கும் இடத்தில் தலா ஒரு லிஃப்ட் அமைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பேட்டர் வாகனங்கள் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில வாரங்களில் பாலம் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் திநகர் புதுபொலிவு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.