தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இவ்வாறு வரும் மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இதனால் தீபாவளியையொட்டி துணி, மளிகை பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியதால் டவுன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து கடைவீதி உள்ளே செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
மேலும் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை அனுமதிக்க மறுத்து கொட்டும் மழையில் தொடர் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் ஆசாமிகளை பிடிப்பதற்கு காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா உதவியுடன் தீவிர பணியில் ஈடுபட்டனர்.