தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது “தீபாவளியையொட்டி அரசின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயங்க இருக்கிறது. இதுபோன்று தனியார் பேருந்துகளும் அதிகமாக இயக்கப்பட இருகின்றது. இதில் தனியார் பேருந்துகளுக்கு முதலமைச்சர் உத்தரவின்படி குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற புகார்கள் எழுந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பொதுமக்கள் புகார் கொடுக்கும் போது கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் பெயர்களை குறிப்பிட்டு சொன்னால்தான் நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக இருக்கும். இந்நிலையில் அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றது. இதன் முதற்கட்டமாக அரசு பேருந்துகளில் 2,900 எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆகவே படிப்படியாக தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பேருந்துகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும். மேலும் தீபாவளி பண்டிகையொட்டி மக்களின் தேவைக்கு ஏற்றவாறு கூடுதலாக பேருந்துகள் இயங்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.