பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் மேற்கு பகுதியில் நானெட்ஸ் நகரில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் பீட்டர் அண்ட் செயின்ட் பவுல் என்ற பழமை வாய்ந்த தேவாலயம் ஒன்று இருக்கின்றது. இத்தேவாலயம் பிரான்ஸ் நாட்டின் வரலாற்று சின்னத்தில் ஒன்றாகவும், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. நேற்று அதிகாலை தேவாலயத்தினுள் எதிர்பாராதவிதமாக தீ பிடித்து தேவாலயம் முழுவதுமாக பரவியது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 60-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள். தேவாலயத்தினுள் காலை நேரத்தில் எவருமில்லாததால் உயிரிழப்பு, படுகாயம் ஆகிய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. பழமையான தேவாலயம் என்பதால் தீவிபத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. எப்படி தீப்பற்றியது என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.