Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சின்னமுத்தாண்டிப்பட்டியில் சலீம்-ஷகிலா பானு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் 5 வயதில் அசாருதீன் என்ற மகன் இருக்கின்றனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மேலும் இளைய மகள் ரிஸ்வானா பர்வீன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் 5 வயது மகனான அசாருதீனை தம்பதியினர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்த்தனர். இதனையடுத்து சலீம் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். இதனிடையில் தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழையால் சலீம் வசித்து வரும் குடிசை வீட்டின் சுவர் நனைந்து இருந்தது.

இந்நிலையில் அந்த குடிசை வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் முன்பக்க சுவர் உறங்கி கொண்டிருந்த சிறுவன் அசாருதீன் மீது விழுந்து விட்டது. இதனால் சிறுவன் இடிபாடுகளுக்குள் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இவ்வாறு சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த மற்ற அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சிறுவன் அசாருதீனை மீட்டு தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதன்பின் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுவன் அசாருதீனின் உடல் செங்கிப்பட்டியில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.

Categories

Tech |