பிரித்தானியாவில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் நாட்டிங்ஹாமில் ஒரு தொழிற்பேட்டையில் உள்ள உலோக தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு வேளையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயானது தொழிற்சாலை முழுவதும் பரவி மளமளவென எரிந்தது. இந்நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து Nottinghamshire தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறியபோது “எங்களுக்கு இரவு 7.20-க்கு Dunkirk பகுதியில் Harrimans Lane-ல் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்தது. அதன்பின் தகவல் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அதிக அளவு புகையும், பலத்த காற்றும் இருந்ததால் குடியிருப்பாளர்களை அப்பகுதியை விட்டு வெளியேறவும், முடிந்தவரை ஜன்னல் மற்றும் கதவுகளை மூடுமாறு கேட்டு கொண்டுள்ளோம்” என்று கூறினார். இதனைத்தொடர்ந்து இரவு 11 மணி அளவில் வெளிவந்த தகவலின்படி பல மணிநேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் தீயை முழுமையாக அணைக்கும் முயற்சியில் வீரர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த தீ விபத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதனிடையில் விபத்தில் உயிரிழப்புக்கள் மற்றும் சேதாரங்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.