குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாலையோரம் குடிசை அமைத்து ஆனந்த்- நாகம்மாள் என்ற தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 11 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை கடந்த 15-ஆம் தேதி திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை கைது செய்ய கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மேற்பார்வையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்பின் தனிப்படை காவல்துறையினர் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று குழந்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் குழந்தையை கடத்தி சென்றவர்கள் நாகர்கோவிலைச் சேர்ந்த மிக்கேல் மற்றும் மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பது தனிப்படை காவல்துறையினருக்கு தெரியவந்தது.
மேலும் இவர்கள் குழந்தையுடன் தாராசுரம் பேருந்து நிலையத்தில் நிற்பதும் தனிப்படை காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் தாராசுரத்திற்கு விரைந்து சென்று மிக்கேல் மற்றும் ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்து, அவர்களிடம் இருந்த குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். அதன்பின் குழந்தை கடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து மிக்கேல் மற்றும் ஆறுமுகத்திடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையிலேயே குழந்தை கடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தை ஆனந்த்-நாகம்மாள் தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.