லாரிகளில் டீசல் இல்லாமல் மற்றும் பழுதடைந்து நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப் பாதையில் உள்ள மொத்தம் 27 கொண்டைஊசி வளைவுகள் கர்நாடகா செல்வதற்கு முக்கிய வழி பாதையாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறிய வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் சென்று வந்தபடி போக்குவரத்து அதிகமாக காணப்படும். அப்போது சாதாரணமான லாரிகள் இந்த வளைவுகளை கடந்து சென்றுவிடும். ஆனால் அதிகமாக பாரம் ஏற்றி வரும் லாரிகள் வளைவுகளில் திரும்ப முடியாமல் நின்று போக்குவரத்து பாதிப்பது தொடர் பிரச்சனையாக இருக்கின்றது.
இந்நிலையில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து லாரி மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் கடந்தபோது திடீரென டீசல் தீர்ந்து நின்றுவிட்டது. இதனால் மலைப்பாதையின் இரு பக்கமும் பெரிய அளவிலான வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து டீசல் நிரப்பப்பட்டு பின் லாரி அங்கிருந்து புறப்பட்டது.
இதேபோன்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து ஈரோட்டுக்கு அரிசி பாரம் ஏற்றி வந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 26-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியது. அப்போது லாரி பழுதாகி சாலையில் நின்றதால் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் வரிசையாக நின்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி சாலை ஓரத்திற்கு இழுத்து வரப்பட்டது. இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.