2 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டசம்பவம் குறித்து காவல்துறையினர் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பொன்னம்மாபேட்டை கனகராஜ கணபதி தெருவில் மளிகை கடை ஒன்று நடத்தி வருகின்றார். இந்த கடை ஒட்டி மாவு அரைக்கும் மில் நடத்தி வருகின்றார். இதனையடுத்து இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு பெருமாள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் மளிகை கடையிலிருந்து புகை கிளம்பி சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது பற்றி பெருமாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி பெருமாள் கடைக்கு விரைந்து வந்துள்ளார்.
இதன் இடையில் இதுகுறித்து தகவலறிந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில், தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் கடையில் இருந்த அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்கள் சோப்பு, பவுடர், அழகு சாதன பொருட்கள் என பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று உடையார்பட்டி அருகில் அதிகாரிபட்டியில் வசிக்கும் பெரியசாமியின் அழகு சாதனம் பொருட்கள் கடையிலும் தீ விபத்து ஏற்பட்டது. அதன்பின் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.