காட்பாடியில் துப்பாக்கியுடன் வேட்டையாடுவதற்கு சென்ற 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மூலகசம் ஓடைப் பகுதி காட்பாடி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சூடு வெடிக்கும் சத்தம் கேட்டு காவல்துறையினர் விரைந்து சென்று பார்த்தபோது 6 பேர் கொண்ட கும்பல் காட்டுப்பூனை, முயலை நாட்டுத் துப்பாக்கியால் வேட்டையாடியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 6 பேரையும் கையும் களவுமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதன்பின் வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர்களான தேவதாரிங், குட்டி, அன்பு, பகவதி, பெரியபுதூரை சேர்ந்த ஆனந்தன், பள்ளிகுப்பத்தை சேர்ந்த பழனி ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து வனத்துறையினர் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோன்று காசி குட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாடச் சென்றுள்ளனர். அவர்களை காவல்துறையினர் பிடித்து நடத்திய விசாரணையில், லத்தேரியை சேர்ந்த இன்பகுமார், ஜீவானந்தம் ஆகியோர் பட்டதாரிகள் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.