மின் நிலையத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் இலங்கை முழுவதும் இருளில் சூழ்ந்துள்ளது.
இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கெரவலடியா என்ற இடத்தில் துணை மின் நிலையம் இயங்கி கொண்டிருக்கிறது. இலங்கையின் பிரதான மின் நிலையங்களில் ஒன்றான அங்கு நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இலங்கை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியுள்ளது. திடீரென ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாக மக்கள் அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாததால், பல்வேறு பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அனைவரும் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் இன்ஜினியர்கள் மற்றும் மின்வாரிய மூத்த அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அதன் பலனாக கொழும்புவில் பல்வேறு இடங்களிலும் மற்றும் தெற்கு மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளிலும் 7 மணி நேரத்திற்குப் பின்னர் மின் இணைப்பு சீராகி உள்ளது. ஆனால் மீதமுள்ள பகுதிகளில் மின் இணைப்பு தற்போது வரை சரி செய்யப்படவில்லை. இந்த பிரச்சனைக்கு நாசவேலை காரணமாக இருக்காது எனக் கூறி மின்சாரத் துறை மந்திரி டல்லஸ் அலகப்பெருமா, இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.