மதுரை மாவட்டத்தில் மர்மமான முறையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் சடலமாக ஒருவர் இருந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி அருகில் விராலிப்பட்டி புளியங்கண்மாய் பாலத்திற்கு கீழே ஓடைக்குள் கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். தீயணைப்பு வீரர்களும், நிலைய அதிகாரி சதக்கத்துல்லா ஆகியோர் வந்து தீயினால் எரிந்து கொண்டிருந்த காரை அணைத்தனர். அப்போது போலீசார் காரில்சென்று பார்த்தபோது பின்புற இருக்கையில் ஒருவர் கருகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டுள்ளனர்.
இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். காரில் சடலமாக இருந்தவர் மதுரை ஐயர் பங்களாவை சேர்ந்த தொழில் அதிபர் சிவானந்தம் என்பது தெரிந்தது. அவர் மருந்து கடை ஒன்றை கே.கே.நகரில் நடத்தி வந்துள்ளார். அவருக்கு ராஜி என்ற மனைவியும் ஒரு மகளும் இருக்கின்றன. அவரது மகள் வெளிநாட்டில் இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் கோவையில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சிவானந்தம் காரில் சென்றுள்ளார். அதன்பின் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசம் செய்துள்ளார்.
பின்பு நேற்று மதியம் 12 மணிக்கு மதுரையை நோக்கி வந்துள்ளார். அதன் பின்னர் விராலிப்பட்டி புளியங்கண்மாய் பாலத்தின் கீழ் புறம் அணுகு சாலை வழியாக கார் ஏன் சென்றது?, தீ பற்றி எப்படி எரிந்திருக்கும், காரை ஓட்டி வந்த சிவானந்தம் எப்படி பின் சீட்டில் கருகிய நிலையில் சடலமாக இருந்தார், எனப் போலீசாருக்கு புரியவில்லை. சிவானந்தம் தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா, வேறு யாராவது அவரை அடித்து கொலை செய்து விட்டு அவரது காரில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டார்களா என்று பல தரப்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலின் பேரில் அங்கு டி.ஐ.ஜி. ராஜேந்திரன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் ஆகியோர் சம்பவம் நிகழ்ந்த இடத்தையும் காரையும் பார்வையிட்டு சோதனை செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.