திருடச்சென்ற இடத்தில் மது போதையில் தூங்கிய நபரை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் கண்ணன் தனது செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் காணாமல் போன தனது செல்போனை கண்ணன் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் அறையில் மதுபோதையில் ஒருவர் தூங்கி கொண்டிருந்ததை பார்த்து கண்ணன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் காணாமல் போன தனது செல்போன் அந்த நபரின் கையில் இருந்துள்ளது.
இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு கண்ணன் அந்த நபரை சரமாரியாக அடித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் ரிச்சர்ட் என்பதும், இரவு நேரத்தில் திருடுவதற்காக வீட்டிற்குள் வந்ததும் தெரியவந்துள்ளது. அதன்பின் மதுபோதையில் ரிச்சர்ட் அங்கேயே தூங்கி விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரிச்சர்ட்டை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.