கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்த நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆலமரத்து கருப்பண்ணசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் சுற்றுச்சுவர் இல்லாத பாதுகாப்பற்ற இடத்தில் வைக்கப்பட்ட அந்த கோவில் உண்டியலை ஒருவர் உடைத்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக பொதுமக்கள் ஊத்துக்குளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொதுமக்களை பார்த்ததும் அந்த நபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து விட்டனர். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்குளி காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த நபர் காளிபாளையம் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.