திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் 19 எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குட்கா போன்ற பல்வேறு புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் சகஜமாக புகையிலைப் பொருட்கள் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தில், திமுக கட்சியினர் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கொண்டுசென்று சபாநாயகரிடம் காண்பித்துள்ளனர். அதன் பின்னர் திமுக தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உரிமைக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் உரிமை குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு எதிராக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த உரிமை குழு நோட்டீஸுக்கு தடைபெற்ற நிலையில், அந்த வழக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி எம்.துரைசாமி, உரிமைக் குழுவின் நோட்டீஸ் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
அதன் பின்னர் இந்த வழக்கு தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் உள்ளடங்கிய அமர்வின் விசாரிக்கப்பட்டு, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் தலைமை நீதிபதியின் அமர்வில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி அதில் சில குறைபாடுகள் இருப்பதால் மீண்டும் புதிய நோட்டீஸ் அனுப்புமாறு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.