திமுக பிரமுகர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(44). திமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் கட்டப்பஞ்சாயத்து செய்வது மற்றும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை பார்த்திபன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பார்த்திபனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
மேலும் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்திபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பார்த்திபனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கோவில் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் பார்த்திபனை அவர்கள் கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.