திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா மாரடைப்பின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் திடீரென உயிரிழந்தது திமுகவிற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சேலம் மண்டலத்தில் கழகம் வளர்க்கும் வீரனாக வளர்ந்த அருமை சகோதர வீரபாண்டி ராஜா அவர்கள் இனிமையாய் பேசி பழகும் அருமையான குணத்தை கொண்டு அனைவரையும் ஈர்க்கும் பண்பு உடையவர். அவரிடம் எந்த பொறுப்புகளை கொடுத்தாலும் அதனை திறம்பட செய்து முடிப்பார். அதன்படி இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், மாவட்ட செயலாளர் மற்றும் தேர்தல் பணிக்குழு செயலாளர் ஆகிய பணிகளை சிறப்பாக செய்து மக்களுக்கு பணியாற்றியவர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சேலத்தில் அரசு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது வீரபாண்டி ராஜாவை சந்தித்தபோது அன்போடு பேசிய வெள்ளை உள்ளம் கொண்ட அவரின் புன் சிரிப்பை மறக்க முடியவில்லை. இளமைக் காலத்திலே அவரை நாம் இழந்திருந்தாலும் கழகத் தொண்டர்களின் மனதில் அவரின் புகழ் நிலைத்திருக்கும். வீரபாண்டி ராஜாவின் குடும்பத்திற்கும் கழகச் செயல்வீரர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.