நாமக்கல் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் என நாடகமாடி 5 1/2 நகைகளை திருடி சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி மாதேஸ்வரி வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி 2 மர்மநபர்கள் தங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்துகொண்டுள்ளனர். இதனையடுத்து உங்கள் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததாக கூறி கடை மற்றும் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவை திறக்கும்படி மாதேஸ்வரியிடம் கூறியுள்ளனர். மேலும் மாதேஸ்வரி தனது கணவரை அழைத்து வரும்படி வெளியே சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 5 1/2 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு ஏதும் தெரியாததுபோல் இருந்துள்ளனர். இந்நிலையில் பழனிசாமியும் வீட்டிற்கு வந்ததும் அவர்கள் புகையிலை பொருட்கள் எதுவும் இல்லை என கூறிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து நகைகள் திருடுபோனதை அறிந்த பழனிச்சாமி மற்றும் மாதேஸ்வரி உடனடியாக நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்ததில் அந்த மர்மநபர்கள் பள்ளிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சுப்பிரமணி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்த போலீசார் திருடி சென்ற 5 1/2 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் அரசு அதிகாரிகள் என கூறி திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.