காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அனைவரும் பயன் பெறும் வகையில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் காவல் நிலையம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது முயற்சியில் காவல்துறையினர் நமது நூலகம் அமைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பொதுமக்களிடம் புத்தக உண்டியல் மூலம் புத்தகங்களை நன்கொடையாக பெற்று இந்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் உதவி சூப்பிரண்டு சமயசிங் மீனா தலைமை தாங்கினார்.
இதனையடுத்து நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நூலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் லாரன்ஸ் மற்றும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தென்மாவட்டத்தில் முதல்முறையாக வள்ளியூரில்தான் காவல்துறையினர் பொதுமக்கள் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.