சமூக இடைவெளியை மறந்து மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டமாக நின்றதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தென்னம்பாளையம் பகுதியில் காய்கறிகள் மற்றும் மீன் சந்தையானது இயங்கி வருகிறது. இந்த மீன் சந்தையில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றது. இதனால் கன்னியாகுமரி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மீன்கள் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்படுகிறது. இதில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகமாக மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் நேற்று தென்னம்பாளையம் மர்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாக காணப்பட்டதால் விலை அதிகரித்து இருந்தது.
இதனையடுத்து பொதுமக்கள் மீன்களை வாங்குவதற்காக மார்க்கெட்டுக்கு திரண்டு வந்தனர். அதன்பின் வெள்ளியங்காடு, பட்டுக்கோட்டையார் நகர், காட்டுவளவு, பெரியார் நகர் போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் மார்க்கெட்டில் மீன்களை வாங்கிச் சென்றனர். இவ்வாறு மீன் மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியதால் அவர்கள் சமூக இடைவெளியை மறந்து நின்றனர். இதேபோன்று ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து திரண்டனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.