தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியவலசு நேதாஜி நகர் பகுதியில் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சீட் கவர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு நான்சி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் திமூன் அந்தோணி என்ற ஆண் குழந்தை இருந்தது. இவர்களுடைய வீட்டின் முன்பு 8 அடி ஆழம் உள்ள தரைதள தண்ணீர் தொட்டி இருக்கிறது. இந்நிலையில் யாரோ காவிரி தண்ணீர் வருகிறதா என்று தண்ணீர் தொட்டி மூடியை திறந்து பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் தண்ணீர் தொட்டியை சரியாக மூடாமல் சென்றுவிட்டனர். அப்போது வீட்டின் வாசல் பகுதியில் நின்று விளையாடி கொண்டிருந்த குழந்தை திமூன் அந்தோணி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டார்.
இதனை நீண்ட நேரமாகியும் யாரும் கவனிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து மதியம் சாப்பிடுவதற்காக தாமஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது குழந்தை வீட்டில் இல்லாததால் தாமஸ் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். எனினும் குழந்தை கிடைக்காததால் சந்தேகமடைந்த தாமஸ் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளார். இந்நிலையில் தண்ணீரில் மூழ்கியபடி குழந்தை கிடப்பதைப் பார்த்து தாமஸ் அதிர்ச்சியடைந்தார். அதன்பின் தாமஸ் உடனடியாக குழந்தை திமூன் அந்தோணியை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.