மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயியாக இருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் தட்சிணாமூர்த்தி விவசாயம் செய்வதற்காக சில பேரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் தட்சிணாமூர்த்திக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் போதிய வருமானம் விவசாயத்தில் கிடைக்காததால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தட்சிணாமூர்த்தி மனமுடைந்து காணப்பட்டார்.
இதனால் தட்சணாமூர்த்தி விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தட்சிணாமூர்த்தியை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக தட்சிணாமூர்த்தி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே தட்சணாமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.