ஆட்டோ டிரைவர் வீட்டில் திருட வந்த திருடர்களை பெண்கள் ‘ஓட ஓட’ விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அன்னை நகர் பகுதியில் ஆட்டோ டிரைவரான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அதன்பின் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த பொருட்களை திருட முயன்றனர். அப்போது சுப்பிரமணி தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் திருடர்கள் வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடி வந்துள்ளனர். இதனை பார்த்த சுப்பிரமணி, ‘திருடன், திருடன்’ என்று கூச்சலிட்டார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பெண்கள் அங்கு ஓடி வந்து திருடர்களை பிடிக்க ஓட, ஓட விரட்டினார்கள். ஆனால் திருடர்கள் தாங்கள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் ஏறி தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அறிந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் காவல்துறையினர் திருடர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.