திருமலை நம்பி கோவில் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலை நம்பி கோவில் திருகுருங்குடி பகுதியில் உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக திருமலை நம்பி கோவில் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் அரசு பல்வேறு வழிமுறைகளுடன் கோவில்கள் திறக்க அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் வனத்துறையினர் திருமலை நம்பி கோவில் திறப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இதனால் பொதுமக்கள் கோவில் திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையின் படி களக்காடு துணை இயக்குனர் அன்பு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் யோகேஸ் சிங் மற்றும் களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் ஆகியோர் ஆலோசனை செய்து இரண்டரை மாதங்களுக்குப் பிறகு கோவிலை திறக்க அனுமதி அளித்தனர். இதனால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் தரிசனம் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கோவிலின் நுழைவாயிலில் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னரே கோவில் ஊழியர்கள் அனுமதித்தனர். இதனையடுத்து வனப்பகுதியில் சுற்றுலா செல்லவோ, ஆற்றில் குளிக்கவோ பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என வனத்துறையினர் அறிவித்தனர்.