திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண்ணின் வீட்டின் முன்பு வாலிபர் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்திலுள்ள பாலையனூர் பகுதியில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் போது அஜீத்துக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளம்பெண்ணை அஜித் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அஜித்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த இளம்பெண் அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் அந்த இளம் பெண்ணின் பெற்றோர் அஜித்தை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் அஜித் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற சமயத்தில் அந்த இளம் பெண்ணின் பெற்றோர் அவருக்கு வரன் பார்க்க தொடங்கியுள்ளனர். தற்போது அந்தப் பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து அறிந்த அஜித் வெளிநாட்டில் இருந்து கேரளாவிற்கு வந்து அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணை வீட்டை விட்டு வெளியே வர கூறியதால் அஜித்துக்கும், இளம்பெண்ணின் பெரியம்மாவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கோபமடைந்த அஜித் தான் கொண்டு வந்த கத்தியை வயிறு மற்றும் கையில் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை தடுத்ததால் இளம் பெண்ணின் பெரியம்மாவிற்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.