காரும், மொப்பட்டும் மோதிக்கொண்ட விபத்தில் மீன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முனியசாமி கோவில் பகுதியில் மாசிலாமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மீன் விற்பனை தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாசிலாமணி தனது உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொபட்டில் திரும்ப புறப்பட்டு கதீட்ரல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று திடீரென இவரின் மொப்பட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது .இதில் மாசிலாமணி மொப்பட்டிலிருந்து தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயமடைந்து உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மாசிலாமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாசிலாமணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.