மனுநூலில் பெண்களின் நிலை குறித்து திருமாவளவன் பேசிய விவகாரம் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாஜகவினர் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் மாறிமாறி போராட்டம் நடத்தி வருவதால் சில பகுதிகளில் பதற்றம் நிலவியது. சென்னையில் திருமாவளவனுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடிகைகள் கவுதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருமாவளவனின் உருவபொம்மையை எரித்து நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய நடிகை கவுதமி, திருமாவளவன் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் ஓயாது என தெரிவித்தார்.
இதேபோல் தமிழகம் முழுவதிலும் பாஜகவினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மாறிமாறி போராட்டங்களில் ஈடுபட்டனர். சில இடங்களில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. மதுரையில் பாஜகவினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு தொல் திருமாவளவனை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் இன்று நடந்த இருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு பாஜகவினர் சிலர் வந்த போது அவர்களுக்கு எதிர்ப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு வாகனங்களை சேதப்படுத்துவதால் பதற்றம் நிலவியது.
பிரதமர் மோடிக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதை கண்டித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாஜகவினரையும் கைது செய்ய வலியுறுத்தியதால் பதற்றம் நிலவியது.