சாட்சிகள் சொல்ல வந்தவர்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் செலவு தொகை கொடுக்க வேண்டும் என்று விசாரணைக்கு ஆஜராகாதவர்களுக்கு மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள குமரகிரி ஏரிபகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஈஸ்வரி என்ற திருநங்கை கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சரத்குமார், அன்பரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்த வழக்கு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சிகள் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் எதிர் தரப்பினர் யாரும் ஆஜராகவில்லை.
அதன்பின் அரசு வக்கீல் பத்மா பேசியபோது கூலி வேலைக்கு செல்பவர்கள் சாட்சி சொல்ல வந்ததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று வக்கீல் வாதிட்டார். இதனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத எதிர்தரப்பினர் நீதிமன்றத்தில் தற்போது ஆஜராகி உள்ள சாட்சிகள் 4 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 8 ஆயிரம் ரூபாய் செலவு தொகை கொடுக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.