ஜோலார்பேட்டை அருகில் ஓடும் ரயிலில் பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழை வடக்கல் பகுதியில் ரவி ராஜேந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சரிரெட் சன்னி கடந்த 24 ஆம் தேதி சென்னையில் இருந்து ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் ஜோலார்பேட்டை காட்பாடி இடையே ரயில் சென்றபோது, உறங்கிக்கொண்டிருந்த சரிரெட் சன்னி வைத்திருந்த பையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து கண்விழித்து பார்த்த சரிரெட் சன்னி தான் வைத்திருந்த பை திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
மேலும் அந்தப் பையில் தங்கச் செயின், தங்க மோதிரம் என 68 கிராம் தங்க நகைகளும், கைபேசி மற்றும் 50,000 ரூபாய் இருந்துள்ளது. இதுகுறித்து கேரள மாநிலம் ஆலப்புழை ரயில்வே காவல் நிலையத்தில் சரிரெட் சன்னி புகார் அளித்துள்ளார். அதற்கு சம்பவம் நடைபெற்ற இடமானது ஜோலார்பேட்டை என்பதால் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி சரிரெட் சன்னி ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி ஜோலார்பேட்டை காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஓடும் ரயிலில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த அந்த மர்ம நபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.