அயர்ந்து தூங்கிய பயணியிடம் செல்போன் மற்றும் பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலைக்காக சென்னை சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது அந்நேரம் பேருந்து வசதி இல்லாததால் பேருந்து நிலையத்திலேயே படுத்து தூங்கியுள்ளார். அப்போது அயர்ந்து தூங்கிய அவர் சிறிது நேரத்தில் எழுந்து பார்த்த போது சட்டையில் வைத்திருந்த 2000 ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அப்பகுதியில் யாரேனும் சந்தேகப்படும்படியாக நிற்கிறார்களா என பார்த்துள்ளார். அப்போது சந்தேகப்படும் படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்ததை பார்த்த பாஸ்கர் அங்கிருந்த சக பயணிகள் உதவியுடன் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து அந்த வாலிபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் சுபாஷ் சந்திரபோஸ் என்பதும், பாஸ்கர் அயர்ந்து தூங்கிய நேரத்தை பயன்படுத்தி அவரது சட்டையில் வைத்திருந்த 2000 ரூபாய் மற்றும் செல்போனை திருடியது தெரியவந்துள்ளது. மேலும் சுபாஷ் சந்திரபோசை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.