மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட சூடான கேள்விகளுக்கு ராஜேந்திர பாலாஜி அளித்த பதில் பின்வருமாறு:
உள்ளாட்சித் தேர்தல்:
கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி? வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?
பதில்: ‘ஏற்கெனவே இருந்து வரும் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கூறியுள்ளார்கள். வெற்றி வாய்ப்பைப் பொறுத்தவரையில் அதிமுக-விற்கு சாதகமாகத்தான் இருக்கும். மக்கள் மனநிலையயும் அவ்வாறு மாறியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவின் நல்லாட்சி தொடரும்’.
திருவள்ளுவர் விவகாரம்:
கேள்வி: தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவள்ளுவரை வடநாட்டவர்கள் மதச்சாயம் பூசி வருகின்றனர் என்று திமுகவின் ஆ.ராசா கூறியுள்ளாரே?
பதில்: ‘திருவள்ளுவர் நிச்சயமாக கடவுள் பக்தி கொண்டவராக தான் இருக்க முடியும். அவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது. திருவள்ளுவர், திருக்குறளில் கூறிய உள்ளார்ந்த கருத்துக்களைப் பார்க்கும் போது இந்து மதப்பற்றாளராகத்தான் இருப்பார். திருவள்ளுவர் மீது பற்றுள்ளவர்களும், அவர் மீது பாசமுள்ளவர்களும் தங்களுக்குரிய பாணியிலேயே தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அவரை வாழ்த்தி வரவேற்று வழிபடுவது அவர்களது உரிமை.
ஆகவே வடக்கு, தெற்காக இருந்தாலும் திருவள்ளுவரின் புகழ் இறைவழிபாடு கொண்டவர்களின் குரலாகத்தான் இருந்திருக்கிறது என்பது என்னுடைய கருத்து என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.