வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஓ வகை இரத்த பிரிவு கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது குறைவு என்ற தகவல் தெரியவந்துள்ளது
கொரோனா தொற்று குறித்து பல மருத்துவ வல்லுநர்கள் உலகம் முழுவதிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆய்விலும் புதுப்புது தகவல்கள் வெளிவருகின்றது. அவ்வகையில் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிலர் மட்டும் எதனால் அதிக அளவு நோய்வாய்ப்பட்டு மரணமடைகிறார்கள்? மற்றவர்களுக்கு ஏன் அறிகுறிகள் குறைவாக உள்ளது? அதோடு சிலர் ஏன் அறிகுறி ஏதும் இல்லாமல் இருக்கின்றனர்? என்ற கேள்விகளுக்கு விடை பாதிக்கப்பட்ட நபர்களின் ரத்த வகைகளில் இருப்பதாக சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
23andME என்கிற மரபணு சோதனை நிறுவனம் சமீபத்தில் தொற்றின் தாக்கம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. தொற்றினால் பாதிக்கப்பட்ட 7.5 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் மருத்துவர் தரவுகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரத்த வகையில் ஓ பிரிவு கொண்டவர்கள் தொற்றிடமிருந்து பாதுகாப்பாக இருக்கின்றனர். பிற ரத்த வகைகளைக் கொண்டவர்களுடன் ஒப்பிடும் பொழுது ஓ ரத்தவகை கொண்ட நபர்களுக்கு பாதிப்பின் சதவீதம் 9-18 வரை மட்டுமே உள்ளது என அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நோயின் பாதிப்பு மற்றும் தீவிரம் ஆகிய அம்சங்கள் குறித்த பல ஆய்வுகளும் ரத்த வகையே இதில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் ஏ வகை ரத்தம் கொண்டவர்கள் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பை காண்பதுடன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலுக்கும் சென்று வருகின்றனர். ஏ நெகட்டிவ், ஏபி நெகட்டிவ், ஏ பாசிட்டிவ் மற்றும் ஏபி பாசிட்டிவ் இரத்த வகை கொண்டவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் ஆபத்தின் அளவு அதிகமாகவே இருக்கும் என்றும் ஓ வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு பாதிப்பின் அளவு குறைவாக இருக்கும் என சீனா ஆய்வாளர்களும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். சிகிச்சை மையங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.