ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3ஆம் அலை குறித்து வருவாய் துறையினர் மற்றும் சுகாதார துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து நேற்று திருப்புல்லாணி, கீழக்கரை சீதக்காதி சாலை, ஏர்வாடி, மீன் மார்க்கெட், பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் நகராட்சி அதிகாரிகள், சுகாதார துறையினர், வருவாய் துறையினர் ஆகியோர் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் பலூன்களில் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என துண்டு சீட்டுகளை எழுதி அதை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
இது அங்கிருந்த பொதுமக்களை மிகவும் கவரும் வகையில் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து முகக்கவசம் எந்த அளவிற்கு முக்கியம் என்பதையும் கொரோனாவின் தாக்கம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அப்போது கீழக்கரை தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் பழனிக்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் காசி விஸ்வநாத துரை, நகராட்சி பொறியாளர் மீரா அலி, வட்டார மருத்துவர் ராசிக்தீன் மற்றும் காவல்துறையினர் என பலரும் பங்கேற்றுள்ளனர்.