ஒவ்வொரு ஓட்டும் மிக மிக முக்கியம் என தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தலிலே போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கு துணை நிற்கின்ற ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் முழுமையாக அவர்களுக்கு தேர்தல் பணியாற்ற வேண்டும். இதே தலைமை கழகம் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது, அவர் வெற்றி பெறுவார் என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது.
ஒவ்வொரு வேட்பாளருக்கும் அந்த பகுதியில் இருக்கின்ற நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆதரவளித்து வேட்பாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரிக்க வேண்டும். நமக்கு விழக்கூடிய ஒவ்வொரு ஓட்டும் பதிவு செய்ய வேண்டும். தேர்தல் காலத்திலேயே சில நேரங்களிலேயே நாம் எண்ணுவது உண்டு…. இவர் ஒரு ஓட்டு போட்டுவிட்டால் நமது வேட்பாளர் வெற்றி பெற்று விடுவாரா ? என்று எண்ணுவீர்கள், அது தவறு.
ஒவ்வொரு ஓட்டும் மிக மிக முக்கியம். சிறுதுளி பெருவெள்ளம் என்று சொல்வார்கள். அப்படி ஒவ்வொரு ஓட்டுகளும் நம்முடைய வேட்பாளர்களுக்கு வெற்றி பெறக்கூடிய வாக்கு. அதை எண்ணிப் பார்த்து நமது வேட்பாளர்கள் தொய்வின்றி பணியாற்ற வேண்டும். இரவென்றும், பகலென்றும் பாராமல் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். அவர்களுக்கு பக்கபலமாக நம்முடைய கழக உடன்பிறப்புகள் செயல்பட வேண்டும் என்று அன்போடு முதலில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
இன்றைக்கு எத்தனையோ தேர்தல் இருக்கும், ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தல் தான் மிக முக்கியம். சட்டமன்ற தேர்தல் வரும், இந்த பஞ்சாயத்தில் வாக்குகள் இல்லையென்றால் அடுத்த பஞ்சாயத்தில் வாக்குகளை பெற்று நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார். அதுபோல நாடாளுமன்ற தேர்தல் வரும்…. நாடாளுமன்றத் தேர்தலிலேயே இந்தத் தொகுதியிலே நமக்கு வாக்கு கிடைக்காமல் போய் விட்டாலும், பக்கத்து தொகுதியிலேயே வாக்குகள் பெற்று வெற்றி பெற முடியும்.
ஆனால் உள்ளாட்சி மன்ற தேர்தலை பொருத்தவரைக்கும் அந்த பகுதியில் இருக்கின்ற வாக்காளர் பெருமக்கள் நினைத்தால் தான் நம்முடைய வேட்பாளர் வெற்றி பெறுவார். அதை எண்ணி நாம் செயல்பட வேண்டும். இதே சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெறலாம், நாடாளுமன்ற தேர்தலிலேயே வெற்றி பெறலாம், ஆனால் உள்ளாட்சி தேர்தலிலேயே வெற்றி பெறுவது என்பது கடினமான ஓன்று. அதை கவனமாக எடுத்து கொண்டு தேர்தலில் பணியாற்றி வெற்றி பெறவேண்டும் என்று முதலில் வாழ்த்துகின்றேன் என பேசினார்.