கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடத்த 2021-ம் ஆண்டு தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் கர்நாடக அரசு புனித் ராஜ்குமாருக்கு உயரிய கர்நாடகா ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கன்னட மொழிக்காகவும், கர்நாடகா மாநிலத்துக்காகவும் நிறைய தொண்டுகளை செய்துள்ளார். அதோடு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்த புனித் ராஜ்குமார் தன்னுடைய மறைவுக்குப் பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.
இதனையடுத்து தற்போது பலரும் தங்களுடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன் வந்துள்ளனர். இப்படி பலருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்த புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாறு பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன் பிறகு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட இருக்கிறது. மேலும் கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியை கட்டாயமாக்குவதற்கு குளிர்கால கூட்ட தொடரில் சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறினார்.