கீழடி நாகரிகம் தமிழர் நாகரிகம் தான், இதை வைத்து பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தனியார் அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் இருந்து கொத்தடிமைகளாக பணியாற்றிய 1200 பேரை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் கொத்தடிமை முறையை ஒழிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 65ஆயிரத்து 573 பேர் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டுள்ளனர். கொத்தடிமைகளாக மனிதர்களை பயன்படுத்தியவர்களுக்குத் தண்டனை வழங்குவதில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது.
கீழடியில் முதல் இரண்டு கட்ட ஆய்வு முடிவுகளையும், வரும் 23ஆம் தேதி ஏற்கனவே கீழடியில் சேகரிக்கப்பட்ட பொருட்களையும் பொதுமக்களின் பார்வைக்காக மதுரையில் காட்சிப்படுத்த உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 70 இடங்களில் தமிழ்நாடு அரசும், 120 இடங்களில் மத்திய அரசும் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும். கீழடி நாகரிகம் என்பது தமிழர் நாகரிகம் தான். அதை வைத்து பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது’ என்றார்.