அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பிற்கு ரகசிய தகவல் வழங்கியதாக கூறி குற்றம்சாட்டப்பட்டுள்ள ஈரானியருக்கு அந்நாட்டு அரசு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.
ஈரானும் அமெரிக்காவும் பல வருடங்களாக மோதலில் இருந்து வருகின்றன. குறிப்பாக தங்களின் அணு ஆயுத உற்பத்திகளை தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா மீது ஈரான் குற்றங்களை சுமத்தி வருகின்றது. மேலும், ஈரானின் புரட்சிப்படை தளபதி சுலைமானி ஈராக் தலைநகரான பாக்தாத்தில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலின் மூலம் கொல்லப்ப்ட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மோதல் அதிகரித்தது. இதனிடையில், ஈரானின் ராக்கெட், அணு ஆயுத தயாரிப்பு மற்றும் சுலைமானி இருக்குமிடம் பற்றிய தகவல்களை அமெரிக்காவின் சிஐஏ அமைப்புக்கு ரகசியமாக தகவல் அளித்துள்ளதாக ரிசா அஸ்ஹரி மற்றும் முஹ்மத் மைஸ்வி மஜித் ஆகிய இரண்டு ஈரானியர்களை அந்நாட்டு அரசு கைது செய்தது.
கைது செய்யப்பட்ட இரு ஈரானியாரும் பணத்திற்காக அமெரிக்காவின் உளவு அமைப்பு சிஐஏ-க்கு ரகசிய தகவல்களை அனுப்பியது உறுதியானதாக ஈரான் நீதிமன்றம் சென்ற மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து முதல் நபராக ரிசா அஸ்ஹரிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்தது. இதனை அடுத்து மற்றொரு குற்றவாளி மஜித்துக்கு கூடிய விரைவில் தூக்கு தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதேபோல் அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக கூறி ஈரான் அரசு பலருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.